💚 இணை 25

733 53 16
                                    

"செல்வா எழுந்திரிச்சு வா! நாம வெளிய போகணும்!" என்று சொல்லி அவனை அழைத்தவளின் முகத்தைப் பாராமல் போர்வையால் தன்னுடைய முகத்தை மூடிக் கொண்டிருந்தவன்,

"எனக்கு குதுகுதுன்னு வருது! எங்க போறதா இருந்தாலும், நீயே தனியா போய்னு வா!" என்று அவளிடம் சொல்ல போர்வைக்குள் உள்ளிருந்து சற்றே மெலிந்து ஒலித்த அவனது குரலைக் கேட்ட சாம்பவி,

"நீ புல் ட்ரெஸ்ல இருக்கியா? இல்ல அரைகுறயா இருக்கியாடா? இப்ப மரியாதயா வெளியில வரல; நான் உன்பெட்ஷீட்ட உருவப்போறேன்!" என்று அவனிடம் கேட்டபடி தன் முடிவையும் சொன்னாள்.

"அடச்சீ கஸ்மாலம்..... ஒரு பொம்பளப்புள்ள கொஞ்சங்கூட வெக்கமில்லாம என்னாண்ட என்ன கேள்விம்மே கேட்டுனு இருக்க?" என்று அவளது
கேள்வியால் எரிச்சலடைந்து அவளிடம் கோபமாக கேட்ட செல்வா படக்கென்று தன் போர்வைக்குள் இருந்து வெளியே வர அவள் கையைக் கட்டிக் கொண்டு அவனை ஒரு மார்க்கமாக பார்த்தபடி நின்றாள்.

"கேள்வி கேக்குறதுக்கு எதுக்கு வெக்கப்படணும்? உண்மையிலேயே நீ அரைகுறையா இருக்குறப்போ உன் பெட்ஷீட்ட உருவுறதுக்கு தான் வெக்கப்படணும்; அதத்தான் நான் செய்யவில்லையே? வா போவோம்!" என்று உறுதியான குரலில் சொன்னவளிடம்,

"என்க்கு ஒடம்பு சரியில்லனு சொல்லினு இருக்கேன் பாப்பா! ஒங்காதுல உழலயா?" என்று கண்களில் கெஞ்சலுடன் அவளிடம் கேட்டான் செல்வா.

"ஓப்பன் ஏர்ல நடந்துட்டு வந்தா சரியில்லாத உடம்பெல்லாம் நல்லாகிடும்! வா போலாம்!" என்று அவனது கையைப் பிடித்து அவனை வீட்டுக்கு வெளியே இழுத்துச் சென்றாள் சாம்பவி.

அவர்களுடைய பகுதியில் ஒரு பேக்கரிக்கு அவனை அழைத்து வந்தவள் அவனுக்கும், அவளுக்குமாக கேக்கும், வெஜிடபிள் பப்ஸூம், கூல்ட்ரிங்க்கும் இரண்டாக வாங்கிக் கொண்டு வந்து அவனுடைய முன்னால் எல்லாவற்றையும் கடைபரப்பி விட்டு அவனெதிரில் அமர்ந்து கொண்டாள்.

அவனை சந்தித்த நாளிலிருந்து செல்வாவின் பார்வையில் தடுமாற்றத்தை சாம்பவி பார்த்ததேயில்லை. தப்பே செய்திருந்தாலும், அவனுடைய நேர்ப்பார்வையால் எதிராளியை நோக்கி அவர்களிடம் பகிரங்கமாக தன்னுடைய தவறை ஒத்துக் கொள்ளும் இயல்பினன், இன்று சீலிங்கை பார்த்தான்; தன்னுடைய திறந்துவிடப்பட்ட சட்டைக்குள் வாயால் காற்றை ஊதிக் கொண்டான்; வெஜிடபிள் பப்ஸில் முட்டையை தேடினான். கேக்கில் போடப்பட்டிருந்த சாக்லெட் சிப்ஸை ஒவ்வொன்றாக எண்ணிக் கொண்டு இருந்தான். மொத்தத்தில் சாம்பவியின் கண்பார்வையை எப்படி தடுப்பது என்று யோசித்த படி இருந்தான்.

இளையவளோ என் இணை இவளோ✔Where stories live. Discover now