💚 இணை 35

788 48 6
                                    

அன்று மதியம் எங்கோ வெளியில் போய்விட்டு வீட்டிற்கு திரும்பிய தனசேகர் ஸோஃபாவில் ஒருமாதிரியாக அயர்ந்து போய் அமர்ந்திருக்க கல்யாணி மெதுவாக அவரருகில் வந்து அமர்ந்து தன்னுடைய கணவரின் முகத்தைப் பார்த்தார்.

தனசேகர் தன் மனைவியிடம்,
"கல்யாணி.... இன்னும் ரெண்டு நாள் தான்மா டைம் குடுத்துருக்காங்க. அதுக்குள்ள நாமளே அவங்ககிட்ட இந்த வீட்ட குடுத்துட்டு வேற எங்கயாவது போயிடணும். இல்லன்னா மூணாவது நாள் அவங்களே வந்து நம்மள வெளிய தள்ளி, சாமானுகள தூக்கி எறிஞ்சுட்டு அப்புறமா வீட்ட எடுத்துக்குவாங்க! இப்ப என்ன பண்ணலாம்?" என்று கேட்டவரிடம் தயங்கிய படி,

"நம்ம மாப்ளைக்கு போன் போட்டு ஒருதடவ பேசிப் பாக்கலாமாங்க?" என்று கேட்டார் கல்யாணி.

"என்னன்னு பேசுவ? உங்க கிட்ட இருந்து எங்களால முடிஞ்ச வரைக்கும் கொள்ளயடிச்சோம் மாப்ள; அந்தப் பணத்த வச்சு கொஞ்ச வருஷத்துக்கு ஒக்காந்து தின்னோம். அது போக எங்க ஆடம்பர செலவுக்கு ஊருல இருக்குற ஒரு வட்டிக்கடக்காரன் கிட்ட வீட்ட அடமானம் வச்சு பணம் வாங்குனோம். இப்ப கையில அடுத்த வேள சாப்பாட்டுக்கு காசு இல்லாத அளவுக்கு அம்புட்டையும் அவங்களோட கம்பெனில ஏமாந்துட்டு நிக்குறோம். உங்கள ஏமாத்தி நாங்க புடுங்குனத, எங்கள ஏமாத்தி இவனுங்க புடுங்கிக்கப் போறாங்க! மறுபடியும் நீங்க எங்கள காப்பாத்துங்க மாப்ளன்னு கேக்குறதாம்மா? அப்டி கேக்குறது சரின்னு உனக்குத் தோணுதா?" என்று கேட்டவரிடம்,

"ரொம்ப தப்புதாங்க! நாம நம்ம மாப்ளைக்கு செஞ்ச நம்பிக்கை துரோகமும், அந்த சின்னக் கொழந்த கிட்ட நாம காட்டுன ஒதுக்கலும் நாம செஞ்ச பாவம்......! கையில, கழுத்துல, காதுல கெடக்குற தங்க நகையெல்லாம் சேத்தா ஒரு பதினஞ்சு பவுன் தேறும். அத மொத்தமா வித்துட்டு, சின்னதா ஒரு வீட்ட வாடகைக்கு எடுத்து ரெண்டு பேரும் ஏதாவது வேல பாத்து மிச்சம் இருக்கிற காலத்த ஓட்டுவோம்; இனிமேலும் மாப்ள, பவிம்மா மூஞ்சியில போயி முழிக்க நமக்கு என்ன தகுதி இருக்கு?" என்று கேட்ட கல்யாணி அந்த வீட்டில் இருந்து எங்கு போவது, என்ன செய்வது என்று முடிவெடுத்திருக்கா விட்டாலும், தன் வாழ்நாளில் முதன்முறையாக இருக்கும் மிச்ச காலத்தில் உழைத்து சாப்பிட வேண்டும் என்ற முடிவுக்கு வந்திருந்தார். காலம் கடந்து வந்த ஞானோதயம் என்றாலும் வீண்ஆடம்பரம் என்ற மாயையில் சிக்கிக் கொண்டிருந்த இரண்டு முதியவர்கள் தங்களுடைய தவறை இப்போதாவது உணர்ந்து செயல்பட நினைத்தனர்.

இளையவளோ என் இணை இவளோ✔Where stories live. Discover now