உருகாதோ எந்தன் உள்ளம் ...! -எஸ்.ஜோவிதா - 11

921 31 0
                                    




11

காலை நேரம் இனிதே விடிந்தது. ரகுராமனும் லக்ஷ்மியும் பல வருடங்களுக்கு பிறகு அமைதியான நிம்மதியான உறக்கம் கொண்டனர். லக்ஷ்மி குளித்து ஈரம் சொட்ட சொட்ட பூஜை  அறையில் சாமிப்படங்களுக்கு மாலை போட்டு ஆராதனை காட்டிக்கொண்டிருந்தாள். ரகுராமன் மனைவியின் பக்தி தெரிந்ததுதான் - ஓசைப்படாமல் டைனிங்க் டேபிளில் வந்தமர்ந்தார். ரோஹித் மாடியைவிட்டு இறங்கியதும் தாயைத்தேடிச்சென்றான். நீர் வடிவதையும் பொருட்படுத்தாமல் அன்னை கண்மூடி பிரார்த்தனை செய்து கொண்டிருக்கும் அழகை இமைக்காது பார்த்துக்கொண்டிருந்தான். லக்ஷ்மி பூஜை முடிந்து மெல்ல விழிகளை திறந்தாள். எதிரே மகன் தன்னையே பார்த்துக்கெணர்டிருக்க,

'வாப்பா...நல்லா தூங்கினாயா? ம்...சாமியை கும்புட்டுக்கோ....' அவன் சாமி பக்கம் திரும்பாமல் தாயை வணங்கியபடி அவளது காலில் விழுந்து எழுந்தான்.

'என்னப்பா இது? சாமியை கும்புடுன்னா என்னை...' கேட்டபடி அவனது நெற்றியில் திருநீற்றை இட்டு கைகளால் கண்ணை மறைத்து மெல்ல ஊதிவிட்டாள்.

'எனக்கு ரெண்டு பேரும் ஒண்ணுதான்மா....' தாயின் முடிந்த கொண்டையிலிருந்து டவலை எடுத்து அவளது கூந்தலை துவட்டினான்.

'என்ன இது? பூஜை அறையில விடு நான் துவட்டிக்குறேன்..'

'சும்மா வாங்கம்மா.....நான் துவட்டிவிடுறேன்' மகனின் அன்பு அதட்டலில் லக்ஷ்மி சிரித்தாள்.

'அம்மாவும் மகனும் சேர்ந்ததும் என்னை மறந்துட்டீங்க பார்த்தீங்களா?'

'என்ன டாடி உங்களுக்கும் தலை துவட்டணுமா?'

'இல்லைப்பா...ஆபீசுக்கு டைமாச்சு உங்கம்மா காபி கூட தராமல் சாமியோடு ஐக்கியமாயிட்டா...'

'காபி தானே...இதோ நான் கலந்து தர்றேன்....' சொன்ன மகனை வியப்புடன் பார்த்தனர்.

'ரோஹித்..! நீ அப்பாகூட பேசிகிட்டிரு நான் எடுத்து வர்றேன்' மகனை அமர வைத்துவிட்டு அவள் கிச்சனுக்கு விரைந்தாள்.

உருகாதோ எந்தன் உள்ளம் ...! -எஸ்.ஜோவிதா Where stories live. Discover now