1 நடந்தது என்ன?

3.5K 78 16
                                    

1 நடந்தது என்ன?

அந்த மழைக்கால இரவின் இருள், தமிழகத்தின் தலைநகரை மொத்தமாய் விழுங்கி கொண்டிருந்தது. அதற்கு அடுத்த நாள் அமாவாசை என்பதால், வெள்ளை சட்டை அணிந்து வந்தவர்களை கூட, அருகில் வந்தால் தான் பார்க்க முடிந்தது.  போதாத குறைக்கு,  மழையும் விடாமல் பெய்து கொண்டிருந்தது. ஆனால் இந்த தடைகள் எதுவும், தமிழக போலீசாரின் செயல் வேகத்தை இமையளவும் குறைக்கவில்லை. மழை கோட்டை அணிந்து கொண்டு, கொட்டும் மழையில் அவர்கள் வேலை செய்து கொண்டிருந்தார்கள்.

தலை நகரத்தின் இதயம் என்று கருதப்பட்ட அந்த முக்கியமான பகுதியில் அமைந்திருந்த ஒரு கட்டிடத்தை காவல்துறையின் வண்டிகள் சூழ்ந்து இருந்தன. அங்கு நடந்த ஒரு கொலையை பற்றி அவர்கள் விசாரித்துக் கொண்டிருந்தார்கள். அது கொலையா, தற்கொலையா என்று அவர்களுக்கு சரியாக தெரியாவிட்டாலும், அதை கொலை என்று தான் அவர்கள் எண்ணினார்கள்.

ஒரு பெண் உயிரோடு எரித்து சாம்பலாக்க பட்டிருந்தாள்... அக்கம் பக்கத்து வீட்டாருக்கு அதைப்பற்றி ஒன்றுமே தெரியவில்லை... ஏனென்றால், எரியும் பொழுது அந்தப் பெண் குரல் எழுப்பவே இல்லை...

அதனால் அது தற்கொலையாக இருக்க வாய்ப்பில்லை என்ற முடிவுக்கு வந்திருந்தான் ஆய்வாளர் முருகன். ஏனென்றால், தன் உடல் மொத்தமாய் எரிந்து சாம்பலாக்கும் வரை, கத்தி குரல் எழுப்பாமல் இருக்கும் அளவிற்கு மனோதிடம் வாய்ந்த ஒரு பெண் இந்த உலகில் இருக்கவே முடியாது என்பது அவனது கருத்து. அவன் எண்ணியதும் சரி தானே? எப்படி ஒரு பெண் சிறு முனங்கல் கூட இல்லாமல் மமுழுதாய் எரிந்து சாம்பலாக முடியும்? எதார்த்தமாய் யோசித்தான் முருகன்.

மேலும், இது அவர்கள் பார்க்கும் முதல் மரணம் அல்ல. கடந்த மூன்று மாதத்தில், இதே போன்ற மரணம், ஏற்கனவே இரண்டு முறை நடந்திருந்தது தான் அவன் அப்படி எண்ணியதற்கு காரணம். இது மூன்றாவது மரணம். ஆனால், அது கொலையா, தற்கொலையா என்பது பற்றி ஒரே ஒரு துப்பு கூட அவர்களுக்கு இது வரை கிடைக்கவில்லை. இந்த மரணங்கள் சம்பவித்த அனைத்து பகுதிகளும் மிகவும் பரபரப்பு வாய்ந்தவை. சென்னை நகரின் பிரசித்தி பெற்ற பகுதிகள் அவை. மூன்று மரணங்களும் ஒரே விதமாய் நிகழ்ந்தவை. இறந்தவரின் மரண ஓலத்தை யாருமே கேட்கவில்லை. அந்த குறிப்பிட்ட பகுதியில், சந்தேகிக்கும் படி யாருமே நுழையவில்லை. அந்நிய ஆட்களையும் அந்த பகுதி மக்கள் பார்க்கவில்லை.

ரகசியமாய்...! (முடிவுற்றது)✔️Where stories live. Discover now