கடவுள் ஏன் கல்லானான்?

68 2 2
                                    


எனக்கோர் காதலி வேண்டும்.....

நெடுநாள் தவம் கொண்ட

நான்

இறைவனிடம்

வரம் கேட்டேன்.


எப்படிப் பட்ட காதலி வேண்டுமென்றார்

அவர்....

அவள் அழகு என

யாரும் அபத்தமாய் கூறக் கூடாது

அழகே அவள் தான்

என புகழ் மெச்சினாலும்

செருக்கில்லா செழுமை

நிறைந்தவளாய் அவள் வேண்டும் 


என்

நகக்கண் இடுக்கிலும்

நரம்பின் புடைப்பிலும்

அவளின் நகலெடுத்து

தினந்தினம்

நறுக்கித் திணிக்க வேண்டும் என

மனம் தினவெடுத்து திரிய வேண்டும் ...


தேவலோக வாசிகளெல்லாம்

வந்தெங்கள்

தெருவினிலே வசித்தாலும்

"இவள் மட்டுந்தான் தேவதை "

என் மனம் முழங்க வேண்டும்


நக்கீரன் மறுத்த

மணமுகிழ் கூந்தல் கதை

அவள் சிகையினிலே

அரங்கேற வேண்டும்.......


இமயம் முழுக்க இறைவனே

இறங்கி வந்து

இடையறாது சிற்பம் செதுக்கினும்

அப்பொய்யிடை உருவிலாளின்

கடைகூட தேறக் கூடாதபடி

அவள் வேண்டும்


என் வீட்டு வாசற்படி

சொர்க்கலோக ஏணிப்படியாய்

அவள் மாற்ற வேண்டும்

அமரர் கூட இதுவன்றோ

சொர்க்க மென ஏமாற வேண்டும்


என் வீட்டு பணப் பெட்டிக்குள்

காற்று மட்டும் குடி புகினும்

அவளின் சில்லறை காசு

சிதறும் சிரிப்பொலி

 இல்லம் நிரப்ப வேண்டும்


அந்த தமயந்தி நளனை

முந்திடுமோர் கலைதனை

அவள் கற்றிருக்க வேண்டும்

அண்டங் காக்கையும்

அவள் படைத்த அமுதுண்ண

முந்நாள் முதல் உண்ணாது

நோன்பிருக்க வேண்டும்..


அவளும் ஓர் மானிடப் பிறவியென

யார் கூறகேட்டாலும்

உலகம் மறுத்து தலையசைக்க வேண்டும்

அவள் குறும்பினால்

அம்புலியை ஆதவனென்றால்

உலகோர் இசைந்தேற்க வேண்டும்.


அவளுடனே  என் உயிர்

திரிய  வேண்டும்.

பிரிவிலே இறப்பும்

புரிதலில் உயிர்ப்பு மென

காலனாய் கடவுளாய் 

அவள் வேண்டும்


சத்தமின்றி சபலமின்றி

நித்தமோர் முத்தப் போர்.

வெற்றி மட்டும் தோல்வியற்று

நடத்திட்டுமோர் நனி சிறந்த

மங்கையென

அவள் வேண்டும்.....


இப்படிப்பட்ட இல்லாள்

போதுமென்றேன்.


என்று கல்லாய் சமைந்த கடவுள்

இன்னும்

அவன் தவத்தை கலைக்க வில்லை

by பாலா

தென்றலில்     தேவதைகள்Where stories live. Discover now