அத்தியாயம் 6

2.2K 181 15
                                    

மறுநாள் ரத்தினம், ஆதித்யனாரை போனில் பிடித்து விவரம் கூறினார். அவர் அணைத்தையும் கேட்டு விட்டு மகனிடம் பேசி விட்டு பதில் கூறுவதாய் சொன்னார்.

அன்று விக்ரம் மும்பை கிளம்பி கொண்டிருந்தான். ஆதித்யனார், டைனிங் டேபிளில் மகனை பிடித்தார். குரலை செருமிக் கொண்டு"தம்பி, நமக்கு தெரிஞ்சவங்க ஒருத்தர் ஒரு அலையன்ஸ் ஒன்று சொல்லி இருக்காங்க. பார்ப்போமா?" என்றார் நேரிடையாக.

அவன் ஒரு நிமிடம் சாப்பிடுவதை நிறுத்தினான், பின் அதை தொடர்ந்தவன் "பேசி முடிச்சுட்டீங்களாப்பா. எப்போ எனக்கு கல்யாணம் பிளான் பண்ணிருக்கீங்க" என்றான் சாதரணமாக.
"ம்ச்.. என்ன தம்பி நீ, அப்பா பேசுறதை கொஞ்சம் காது கொடுத்து கேளு" என்றாள் அம்மா.
"ம்ஹூம்.. சாரிம்மா" என்றவன் சிறு அமைதிக்கு பின் "சொல்லுங்கப்பா" என்றான்.
"நீ தான் சொல்லணும் தம்பி, நீ பேசுனதில் இருந்தே கல்யாணத்திற்கு நீ இன்னும் தயாராகவில்லைனு புரியுது, ஆனா உனக்குனு
ஒரு துணை வேணும், இந்த வயசையும் விட்டுட்டா அப்புறம் உனக்குனு ஒருத்தர் இல்லாமலே போயிடுவாங்களோனு தோணுது விக்ரம், கொஞ்சம் யோசிச்சு சொல்லு" என்றார் அமைதியாக.
" ம்ஹூம்.. கேட்கவே கொஞ்சம் அசிங்கமா இருக்குப்பா, இந்த வயசுல கல்யாணம்.. ம்ச்.. " என்று தடுமாறினான் விக்ரம்.
" புரியுது விக்ரம், ஆனா உன் கூட சண்டை போடவாவது ஒருத்தர் வேணும்பா" என்றார் நிதானமாக ஆதித்யனார்.
விரக்தியாக சிரித்தவன்," சண்டை போட தான் எனக்கு மறுபடியும் துணைனா எனக்கு கல்யாணம் வேண்டாம்பா" என்றான் முடிவாக.
" சரி எந்த மாதிரியான பொண்ணா இருந்தா உனக்கு சரியாக இருக்கும் என நீயே சொல்லு, அந்த மாதிரி தேடி பார்ப்போம்." என்றார் கிடைத்த வாய்ப்பை விடாமல்.
"ம்ஹூம்... அப்பா.. என்னை மாதிரி டைவர்ஸீயா இருந்தா பெட்டர், கொஞ்சம் மெச்சுர்டா இருக்கணும், அவ்வளவு தான்பா." என்றான் கடைசியாக.
" கொஞ்சம் சின்ன பொண்ணா பார்க்கலாமா, இல்ல அதுவும் எதாவது... " என்று இழுத்தார் தகப்பன்.
" எனக்கு புரியலப்பா, ஏன் வயசு என்னவா இருந்தா என்ன? "என்றான் உண்மையிலே புரியாமல்.
" என்ன தம்பி, உனக்குன்னு குழந்தை குட்டி எல்லாம் வேண்டாமா" என்றாள் அன்னை அவசரமாக.
மகன் முகம் சிறுத்து போனது.
" ம்ச்.. உனக்கு எதை எப்போ பேசணும்னு தெரியாது" என்று மனைவியை அதட்டியவர். "நீ, கையை கழுவி விட்டு கிளம்பு விக்ரம் " என்றார்.
கையை கழுவி விட்டு வாசல் வரை சென்ற விக்ரமை" ஒரு நிமிஷம் விக்ரம் " என்ற தகப்பனின் குரல் நிறுத்தியது.
வீட்டில் இருந்த முன் வரவேற்பு அறைக்கு தனியே அழைத்து சென்றவர் "எல்லாருக்கும் சில தேவை இருக்கு, உனக்கு நான் பேசுறது புரியுதுன்னு நான் நம்புகிறேன். ஒரு ஆம்பளையா எனக்கு 55 வயது வரை இருந்த தேவைக்கு உங்கம்மா ஈடு கொடுத்து இருக்கா. வயசுல, உங்கம்மாவை மீறியும் அதை தீர்த்துகிட்ருகேன். எங்களுக்குள்ள அதனால சங்கடங்கள் வந்தாலும் அது தேவைகிறது தான் நிஜம். உனக்கு அந்த மாதிரி ஏதாவது இருந்திருந்தா கூட நான் கல்யாணம் பற்றி பேச்சை எடுக்க யோசிச்சு இருப்பேன்...ம்ச்..என் பசங்க நல்ல விதமாக வளர்ந்து இருக்கிறது பெருமை தான். ஆனா நீ இந்த மாதிரி தனியா இருக்கிறது பேரண்ட்ஸா எங்க ரெண்டு பேருக்கும் தர்ம சங்கடமா இருக்கு, இப்ப ஒரு பொண்ணு அலையன்ஸ் வந்திருக்கு. அந்த பெண்ணுக்கும் இப்ப தான் கொஞ்ச நாள் முன்னாடி டைவர்ஸ் ஆகியிருக்கு, ஆனா பத்து வருஷ கல்யாண வாழ்கைக்கு பின்."என்று நிறுத்தினார். மகனிடம் எந்த ஆர்வம் இல்லாமல் போனாலும் தொடர்ந்தார்."பொண்ணு நல்ல மாதிரினு சொல்லுறாங்க, நீ வேணா பேசி பார்கிறீயா? " என்றார்.
"இப்ப முடியாதுப்பா, நான் மும்பையில் இருந்து வந்ததும் பார்க்கலாம்" என்றுவிட்டு காரை நோக்கி நகர்ந்தான் விக்ரம்.
ஆதித்யனார், ரத்தினத்தை அழைத்து விவரம் கூறியதில் ஜாதகங்கள் இடமாறியது.
அன்னம் தயங்கியபடி ஆதித்யனாரை கேட்டாள்" கேட்கிறேன்னு தப்பா நினைக்காதீங்க, இப்ப என்ன அவசரம்னு இப்படி கல்யாணம் ஆகி 10 வருஷம் கழிச்சு டைவர்ஸ் ஆன பொண்ணை எதுக்கு பார்க்கணும்?" என்றாள் அமைதியாக.
"ம்.. விக்ரம் போன வருஷம் தான் காலேஜ் முடிச்சான் பாரு, சின்ன பொண்ணா தேடுறதுக்கு." - என்றார் அவர்.
"நான் அப்படி சொல்லலீங்க, ஆனா இப்படி ஒரு பெண்ணை எதுக்கு பார்க்கணும்னு தான்" என்று இழுத்தாள்.
" உனக்கு அந்த பொண்ணை பற்றி எதாவது தெரிஞ்சா சொல்லு, சரியா வராட்டி விட்டுடுவோம்" என்றார் இலகுவாக.
அன்னத்திடம் பதிலில்லை. அவரே தொடர்ந்தார்.
" எனக்கு தெரிஞ்சி ஆம்பளைங்க ரெண்டு ரகம் தான், ஒன்று, மக்காவோ, அரை புத்திசாலியா இருக்க பொண்டாட்டியை, வேண்டிய இடத்தில் வேண்டிய விதமா நடத்தி தானே ராஜாவா இருந்துகிறவன், அடுத்த ரகம் தானே ராஜாவா இருப்பான் , அவனோட பொண்டாட்டியை  எல்லா விதத்திலும் ராணியா மட்டும் தான் நடத்த ஆசைபடுவான். இதுல உன் புருஷன் முதல் ரகம், உன் புள்ள இரண்டாம் ரகம். இந்த வயசுல அவனுக்கு அழகான பொண்ணை விட புத்திசாலியை தான் பிடிக்கும். அதான் ரத்தினம் சொன்னதும் எனக்கு இந்த பொண்ணை பார்க்கலாம்னு தோணச்சு. பார்ப்போம். "என்று ஒரு பெரு மூச்சுடன் முடித்தவர் சற்று நேர யோசணைக்கு பின்"ஆமா ஜோசியர் எத்தனை மணிக்கு வர சொல்லி இருக்கார்" என்றார்.
"சாயங்காலம் 5 மணிக்கு வர சொல்லி இருக்காரு" என்றாள் சுரத்தை இல்லாமல்.
ஜோசியர் வீடு, அவர் இரண்டு ஜாதகத்தையும் பார்த்து விட்டு சிரித்தார். "தேவையான பொருத்தம் எல்லாம் நல்லா பொருந்தியிருக்கு சார், தாரளமாக கல்யாணம் செய்யலாம்." என்றார்.
" வ.. வந்து பொண்ணு குணம் எப்பிடி இருக்கும் னு கொஞ்சம் பார்த்து சொல்லுங்க ஐயா" தயங்கியபடியும் கணவனை அரை கண்ணில் பார்த்தபடியும்.
"பிரியம் வச்சவுங்களை தவிர வேற யாருக்கும் பொண்ணு அடங்க மாட்டா, போன வருஷம் வரை இந்த பொண்ணுக்கு பெரும் கஷ்ட காலமா இருந்தது இனி ராஜயோகமா இருக்க போகுது" என்றார்.
ஏதோ பேச வாயெடுத்தவளை கண்களால் அடக்கி, ஜோசியருக்கு நன்றி சொல்லி விட்டு வெளியே வந்தார்கள் இருவரும்.
" ஏற்கனவே ஒரு அடங்காபிடாரியை கட்டி அவன் பட்ட அவஸ்தை பத்தாதா, மறுபடியும் அந்த மாதிரி ஒரு பொண்ணையே தேட வேண்டாம். " என்றாள் அன்னம் தாங்க மாட்டாமல்.
"வீட்டுல போய் பேசிக்கலாம், வண்டியில ஏறு" என்று விட்டு காரில் ஏறினார் ஆதித்யனார். அதன் பிறகு அவளுக்கு பேச வாய்ப்பே கிடைக்காது என்று நன்றாகவே தெரிந்து இருந்தாள். மனதில் கடவுளை இந்த சம்பந்தம் எந்த சூழ்நிலையிலும் நடந்து விட கூடாது என்று வெகுவாக வேண்டிக் கொண்டாள். அவளால் முடிந்ததும் அது மட்டும் தான்.
ரத்தினம், விக்ரம் வீட்டின் விருப்பத்தை தெரிவிக்கவும், அதற்குள் லிங்கமூர்த்தியும் ஜாதகம் பார்த்து அவர்கள் பதிலுக்காக காத்திருந்தவர் மகளிடம் பேசிவிட்டு அவள் நம்பர் தருவதாய் கூறினார்.
பூரணி மகளை அழைத்துக் விவரம் கூறி நம்பர் தர அனுமதி கேட்டாள்.
"கொடும்மா, ஆனா கண்ட நேரத்திலே எல்லாம் என்னை கூப்பிட கூடாதுன்னு சொல்லி நம்பர் கொடு." என்றாள் கறாராக.
"ம்க்கும் .. அப்பாயின்மென்ட் வாங்கிட்டு கூப்பிட சொல்லட்டுமா?" என்றாள் அம்மா நக்கலாக.
"அது ரொம்ப நல்ல ஐடியா, அப்பிடியே சொல்லிடு" என்றாள் மகள் பட்டென.
"ஏ.. என்ன உனக்கு கொழும்பா போச்சா, அவரு கூப்பிடும் போது போனை எடு. பிடிக்குதுதோ பிடிக்கலையோ தயவு செய்து மரியாதையா பேசு அவ்வளவு தான் சொல்லுவேன்" என்றாள் அம்மா கண்டிப்புடன்.
"ம்ச்.. அம்மா ப்ளீஸ், நான் பார்த்துக்கிறேன் நீ விட்டுடு. ஆடா பிரியாணி போட சொன்னா நான் கண்டிப்பா போட்டுருவேன்."என்று விட்டு சிரித்தாள்.
" கடவுள் தான் எங்களை காப்பாற்றணும்,. ம்ஹூம், ஏன்டி உனக்கு தான் அவர் எடுக்கிற படம் எல்லாம் புடிக்கும் தானே, அப்புறம் எதுக்கு இந்த மாதிரி பேசுறே, சாதாரணமா பேசிட்டு பிடிக்காட்டி விட்டுடலாமே." என்றாள் அம்மா தன்மையாக.
" எடுக்கிற படம் மாதிரியா அந்த விக்ரம் இருக்க போறான், ம்ச்.. பார்க்கலாம்மா." என்று விட்டு சற்று நேரம் வேறு கதை பேசிவிட்டு போனை வைத்தாள்.
விக்ரம் இரண்டு மாதம் கழித்து அன்று தான் வீட்டிற்கு வந்தான்.
வந்ததும் வராததுமாக அன்னை அவனிடம் விவரம் கூறி சம்மந்தத்தை மறுக்க சொன்னாள். விக்ரம் யோசனையோடு அப்பாவிற்காக காத்திருந்தான்.

அன்புடை நெஞ்சம் கலந்தனவேWhere stories live. Discover now