1

4.1K 92 97
                                    

வேறே கொத்த பூமி பை உன்னானா....
ஏதோ விந்த்த ராகமே விண்ணானா...
வேறே கொத்த பூமி பை உன்னானா....
ஏதோ விந்த்த ராகமே விண்ணானா...
பலிகே பால கூவதோ.. குலிகே பூல கொம்மதோ.. கசிரே வெண்ணிலம்மதோ.. ஸ்னேகம் சேஸா...

மாலை மங்கத் தொடங்கிய நான்கு மணி வேளையில், காரில் அந்தத் தெலுங்குப் பாடல் மென்மையாக ஒலித்துக் கொண்டிருக்க, அதனோடு தாளம் தவறி, வார்த்தையும் சரியாக வராமல் ஏதோ உளறிக் கொண்டே காரை ஓட்டிக் கொண்டிருந்தான் அந்த இருபத்தாறு வயது இளைஞன்.

"டேய் டேய்...காது கிழியுது...எதுக்குடா புரியாத பாட்டுப் போட்டு நீயும் தப்புத் தப்பா பாடி உயிரெடுக்கற... தமிழ் பாட்டு தான் வையேன்!"

அருகில் அமர்ந்திருந்து அர்ச்சனை பண்ணியவர் அவன் அம்மா.

அதை லட்சியம் செய்யாமல் மேலும் கர்ணகொடூரமாக உச்சஸ்தாயியில் அவன் இழுத்துப் பாட, அவன் அம்மா காதைப் பொத்திக்கொண்டு திரும்பி 'பார்த்தீங்களா?' எனத் தன் கணவனுக்கு ஜாடை காட்டினார்.

"விடு விடு.. தமிழ்ப் பாட்டைப் பாடி அதையும் கொலை பண்ணாம இருக்கானே.. அதுவரைக்கும் சந்தோஷம். நான் பெத்த மகனே, கொஞ்சம் வேகமாப் போடா.. நாம போறதுக்குள்ள ட்ரெயின் வந்துடப் போகுது.."

"ஏன்ப்பா.. எவ்ளோ ரம்மியமான சாங் இது... மெலடிய ரசிச்சிட்டே ஸ்லோவா போகாம, வேகமாப் போ, வேகமாப் போன்னு இப்டி டார்ச்சர் பண்றீங்களே? உங்க யாருக்குமே இசை ரசனையே கிடையாதா??"

அவன் தந்தை 'அடேங்கப்பா..' என்பதுபோல் ஆயாசமாகப் பார்த்தார்.

"ம்க்கும்.. இந்த வேகத்துக்குப் போகணும்னா நேத்து சாயங்காலமே கிளம்பியிருக்கணும். இளவட்டமாச்சே, கொஞ்சம் வேகமா ஓட்டுவியேன்னு உங்கப்பா உன்கிட்ட காரைக் குடுத்தா, நீ மாட்டுவண்டிக் கணக்கா ஓட்டுறயே??"

தன் பங்கிற்கு அவனது அன்னையும் பொரிந்து தள்ள, இருவரையும் முறைத்தபடி கியரை மாற்றி வேகமேற்றினான் அந்த ஆடவன்.

நீயன்றி வேறில்லை.Where stories live. Discover now