15

871 90 52
                                    

தலைமையாசிரியரிடம் விடைபெற்று மீண்டும் தங்கள் வீட்டுக்கு வரும்வரை இருவரும் மௌனமாகவே நடந்து வந்தனர்.

தன்னிடம் அனைத்தையும் மறைத்துவிட்டு சிரித்துப்பேசிய தந்தையையும் தமையனையும் நினைத்து மனதில் பொருமினாள் வானதி. தன்னிடம் அவர்கள் எதையும் பகிர்ந்துகொள்ள நினைக்கவில்லை என்ற எண்ணம் அவளை உலுக்கியது. எங்காவது சென்று வாய்விட்டு அழவேண்டும்போல் இருந்தது அவளுக்கு.

திவாகர் நஞ்சேசன் குடும்பத்தாரின் மேன்மையையும் தயாள குணத்தையும் கேட்டறிந்த பிரம்மிப்பிலும், அத்தகைய மனிதர்களுக்கு நிகழந்த சோகத்தை நினைத்து ஆற்றாமையிலும் அமைதியாக இருந்தான்.

'பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்... என் தந்தையைப்போல வசதி படைத்தவர்களுக்கு அது எளிது. ஆனால், சாதாரண விவசாயி... அவர்களுக்கே சரியான வரவு இல்லாத பொழுதும்கூட, தங்கள் சுற்றத்தாருக்கு ஒரு குறையும் வந்துவிடாமல் காத்தனரே... எவ்வளவு மனப்பக்குவம் இருந்திருந்தால், கஷ்டங்கள் அனைத்தும் தம்மைச் சூழ்ந்தபோதும், உயிராய் நினைத்த விவசாயத்தை விடாமல் செய்துவந்திருக்க வேண்டும்!! விக்னேஷ் போன்ற இளைஞர்கள் இந்தியாவின் மிகப்பெரிய சொத்து...

வானதியின் அறிவும் தெளிவும் எங்கிருந்து வந்ததென இன்று புரிகிறது.'

வீட்டை அடைந்ததும் விறுவிறுவென அண்ணனின் அறைக்குச் சென்று அலமாரிகள் அனைத்தையும் கலைத்தாள் வானதி. துணிமணிகள், புத்தங்கள் அனைத்தையும் எடுத்துக் கீழே போட்டவள், ஆவணங்கள் எதுவும் அங்கே இல்லாததைக் கண்டு, சோர்ந்துபோய் நின்றாள். ஏற்கனவே கொண்டிருந்த சோகமும் ஆற்றாமையும் அதனோடு சேர்ந்து அழுத்த, கைக்குக் கிடைத்தவற்றை எல்லாம் விசிறியெறிந்துவிட்டு அழுதாள் அவள்.

அவளது மனநிலை புரிந்ததால் அவளைத் தடுக்காமல் தள்ளிநின்றான் திவாகரும். அழுது ஓய்ந்தவள், தானாகவே எழுந்து தன்னை நேர்ப்படுத்திக்கொண்டு, "லேட்டாகுது.. வீட்டுக்குப் போலாம்.." எனக் கிளம்பினாள்.

நீயன்றி வேறில்லை.Where stories live. Discover now