19

1K 85 48
                                    

திவாகரின் மனதில் நடந்த ரசாயன மாற்றங்கள் எதையும் அவன் அறியவில்லை. எதிரெதிர் துருவங்களாய் சண்டையிட்டுக்கொண்டும் திட்டிக்கொண்டும் இருந்தபோதிலும், தன்னையறியாமலேயே அவள்மீது மையல் கொண்டிருந்தான் அவன்.

அவளது சிரிப்பும் பேச்சும் பிடித்திருந்தது அவனுக்கு. மற்ற பெண்களில் இதுவரை பார்த்திராத அறிவும் தெளிவும் அவனை அசரவைத்தது. இப்போதெல்லாம் அவன் கண்களுக்குப் பேரழகாய்த் தெரிந்தாள் அவள். தினமும் அவளுடன் புதுப்புது இடங்களுக்குச் செல்வதையும், அவளுடன் நேரம் செலவிடுவதையும் அவனே எதிர்பார்க்கத் தொடங்கியிருந்தான்.

வானதியும் இவனது மாற்றங்கள் எதையும் கவனித்ததாகத் தெரியவில்லை. தனது தந்தையின் நண்பர்களையும் சக விவசாயிகளையும் பார்த்துப் பேசி வந்ததிலேயே மூன்று நாட்கள் ஓடியிருந்தன. ஆய்வாளர் அழகேசன் அவரது விசாரணையையும் முழுமூச்சில் நடத்திக் கொண்டிருந்தார்.

அன்றும் அதுபோலவே வெளியே கிளம்பியபோது, காருக்குள் ஏறச் சென்ற வானதியைத் தடுத்தான் திவாகர்.

"பைக்ல போலாமா? எனக்கு பைக் ஓட்ட கத்துக்குடுப்பியா?"

அவள் திகைத்தாலும், மறுப்பாகத் தலையசைத்தாள்.

"நீ ஓட்டப் பழகறேன்னு சொல்லி எங்கண்ணன் பைக்கை உடைக்கறதுக்கா? அதுமேல பூ விழுந்தாலே எங்கண்ணா பதறுவான். அதையெல்லாம் உன்னை நம்பிக் குடுக்கமுடியாது. வேணும்னா வேற பைக்கை வாங்கிட்டுவா. அப்ப வேணா பாக்கலாம்!"

இருவரும் கார் அருகில் நின்று தர்க்கம் செய்துகொண்டிருப்பதை முன்னறையிலிருந்து பார்த்த வேதாசலம், "என்னம்மா..? என்ன வேணும்?" என்றபடி வெளியே வந்தார்.

"எனக்கு எதுவும் வேணாம் மாமா. உங்க பையனுக்குத் தான் புது பைக் வேணுமாமா..."

விஷமச்சிரிப்புடன் அவள் சொல்ல, திவாகர் அவளை முறைத்துவிட்டு, அப்பாவைப் பார்த்துத் திணறினான்.

அவரோ, "அவ்ளோதான? நம்ம மணியண்ணன் காரேஜுக்குப் போங்க. நான் சொன்னேன்னு சொல்லி எந்த வண்டியை வேணா எடுத்துக்கங்க" என்று இலகுவாகச் சொல்லிவிட்டுச் செல்ல, திவாகர் ஆச்சரியப்பட்டுப்போனான்.

நீயன்றி வேறில்லை.Where stories live. Discover now