24

842 84 38
                                    

அறைக்குள் அமர்ந்து விக்கியின் கைபேசியை உயிர்ப்பித்தான் திவாகர்.

நால்வரும் குடும்பமாக நிற்கும் ஒரு புகைப்படத்தைத்தான் வால்பேப்பராக அதில் பதிவேற்றி வைத்திருக்க, குடும்பத்தோடு நிற்கும் வானதியின் முகத்தை அனுதாபமாக ஒருமுறை பார்த்தான் அவன்.

அழகேசன் அப்படி இந்தக் கைபேசியில் என்ன கண்டுபிடித்தார் எனப் பார்க்கும் ஆர்வத்தில் அதைத் திறந்தால், அவரோ, விவரமாக அதில் கடவுச்சொற்கள் இட்டுப் பாதுகாப்பாகப் பூட்டியிருந்தார். எவ்வளவோ முயன்றும் அவனால் கைபேசியைத் திறக்க முடியாமல் போக, சோர்ந்தான் திவாகர். வாசலில் யாரோ கதவைத்தட்டும் ஓசைகேட்டு அதை முதுகுக்குப் பின் மறைத்தான் பட்டென. கைபேசியை பத்திரப்படுத்திவிட்டுக் கதவைத் திறந்தான்.

வானதிதான் நின்றிருந்தாள். அவனை வினோதமாகப் பார்த்தபடி, "என்ன பண்ணிட்டு இருந்த??" என வினவினாள் அவள். அவன் லேசாகத் தடுமாறினான்.

"அ.. அது.. கொஞ்சம் வேலை விஷயம்.."

அவன் அமெரிக்கா செல்லப்போவதை மீண்டும் நினைவுபடுத்திட, வானதி முகம் கன்றியது. அவனைப் பார்க்காமல் தலையைக் குனிந்துகொண்டவள், "ஆதிகேசவனைப் பத்திக் கொஞ்சம் விசாரிக்கணும். நான் வெளியே போறேன்... வர்றதுன்னா வா" என்றுவிட்டு வெளியேற, ஒரு நிம்மதிப் பெருமூச்சு விட்டான் அவன். அவளை எங்கும் அழைத்துக்கொண்டு போகவேண்டாம் என்று அழகேசன் கூறியது நினைவிருந்தது அவனுக்கு. தான் வராவிட்டால் அவள் தனியாகவே கிளம்பிவிடுவாள் என்பதும் தெரியும் அவனுக்கு. அவளைத் தனியே விடுவது ஆபத்து என்பதால் அவளுடன் செல்வதற்காக எழுந்து வெளியே சென்றான்.

மணி ஆறாகியிருக்க, வானதியின் புத்தகத்தை ஹரிணியும் பானுவும் புரட்டிக்கொண்டும் பேசிக்கொண்டும் இருந்தனர். வானதி அவர்களுக்கு பதிலளித்துக்கொண்டே மீனாட்சியுடன் சேர்ந்து கூடத்தை ஒதுக்கிக்கொண்டிருந்தாள். திவாகர் வருவதைப் பார்த்ததும், "என்ன அண்ணா, பைக் ஓட்டக் கத்துக்கிட்டதுல இருந்து அண்ணிக்கு நீதான் டிரைவரா?" என ஹரிணி நகைக்க, பானுவும் வானியும்கூட சிரித்துவிட, மீனாட்சி அவளை அதட்டினார். "அவன் என்ன யாருக்கோவா ஓட்டறான்? அவன் பொண்டாட்டிய தானே கூட்டிட்டுப்போறான்? உங்க அண்ணியை அவன் பாத்துக்காம வேற யாரு பாத்துக்குவா?"

நீயன்றி வேறில்லை.Where stories live. Discover now