8

951 88 34
                                    

தந்தையின் கட்டளைக்கிணங்க வானதி தன் அறையில் தங்கிக்கொள்ள ஏற்றுக்கொண்டான் திவாகர்.
 
இன்னும் உயிர்ப்பிக்காத அலைபேசியும், இதயத்தை உறுத்தும் ரூபாவின் நினைவுகளுமே அவன் மனதை ஆக்கிரமித்திருக்க, வானதியை ஏறிட்டுப் பார்க்கவும் தோன்றவில்லை அவனுக்கு.

எனவே பால்கனிக்குச் சென்று தன் விதியை நினைத்து கலங்கிக் குழம்பி, தன் தலையைக் கைகளில் தாங்கியபடி நின்றிருந்தான். யாரோ தன்னைப் பார்த்ததுபோல் உணர்ந்து அவன் திரும்ப, அதே நேரத்தில் வானதியும் அறைக்குள் போகத் திரும்ப, அவளைக் கவனித்துவிட்டவனுக்கு, அவளுடன் நடந்த உரையாடல்கள் மீண்டும் சிந்தனைக்கு வந்தன.

'அவளைத் தெரியவில்லை எனக் கூறியபோது ஏன் முறைத்தாள்? அவளை எங்காவது பார்த்திருக்கிறோமா? முகத்தைப் பார்த்தால் ஏதேதோ நினைவடுக்குகளில் அடிக்கடி ஒளிந்து விளையாடும் முகம்போல இருக்கிறதே.. அவர்கள் குடும்பப் புகைப்படத்தைக் கண்டபோது கூட ஏதோ மறந்ததை நினைவுபடுத்த சிரமப்படும் உணர்வு வந்ததே...

உண்மையில் இவள் யார்? அப்பாவின் இத்துணை நெருங்கிய நண்பர் குடும்பமென்றால், ஏன் இத்தனை ஆண்டுகளில் ஒருமுறைகூட அவர்களைப் பற்றிப் பேசவில்லை அவர்? திடீரென இன்று, அவர்கள் இறந்துவிட்ட பிறகு, எங்கிருந்து வந்தது உறவும் பாசமும்? அம்மாகூட என்னிடம் எதுவுமே சொன்னதில்லையே... ஆனால் வானதியை தான் பெற்ற மகள்போல ஆராதிக்கிறாரே?

என்மேல் ஏதோ கோபத்தில் இருப்பதுபோல் தோன்றுகிறது.. அதுவும் ஏன் என்ன என்று ஒன்றும் புரியவில்லை. இருக்கிற குழப்பங்களில் அதுவும் சேர்ந்து கழுத்தறுக்கிறது! சே!'

அவளிடமே கேட்டுவிடலாம் என வேகமாக உள்ளே வந்தான் அவன். ஆனால் அவள் முகத்தைப் பார்த்ததும் மீண்டும் சிந்தனைச் சங்கிலி அறுபட, அவளை எங்கே பார்த்திருக்கிறோமென மீண்டும் முதலிலிருந்து யோசிக்கத் தொடங்கினான். அவளது பார்வையை உணர்ந்து, மெல்லத் திணறி, "எக்ஸ்க்யூஸ்மீ... என்னை.. நான்.. யாருன்னு.. உன-- உங்களுக்கு முன்னாலவே ஏதாவது தெரியுமா?" என்று கேட்டுவிட்டான்.

நீயன்றி வேறில்லை.Where stories live. Discover now