33

972 78 14
                                    

திவாகர் வாய்திறந்து ஏதோ சொல்லவந்த நேரத்தில், வாசலில் ஆங்காரமான சைரன் சத்தம் சட்டெனக் கிளம்பிட, அதன் எதிர்பாரா ஒலியில் திகைத்து இருவரும் திரும்பினர்.

வானதி அறையைவிட்டு வெளியேறி வாசலுக்குச் செல்ல, அதற்குள் சத்தத்தில் வேதாசலம், மீனாட்சியும் வேகமாக கூடத்துக்கு வந்தனர். கேட்டிலிருந்து காவலாளி ஓடிவந்தார்.

"போலீஸ் வந்திருக்காங்க ஐயா. ஏதோ விசாரிக்கணுமாம்."

வானதி திடுக்கிட்டு திவாகரைத் திரும்பிப்பார்க்க, அவன் முகமும் திகைப்பில் விரிந்தது. ஏதும் பேசுமுன் ஒரு காவல் அதிகாரி வீட்டுக்குள் வந்தார். வேதாசலத்திடம் பணிவாக ஒரு வணக்கம் வைத்தவர், "மதுரை ஸ்டேஷன்ல இருந்து வர்றோம். வானதிங்கறது யாரு சார்?" என்றார்.

வானதியைக் கடைக்கண்ணால் பார்த்தவர், பதில் கூறாமல், "எதுக்குக் கேக்கறீங்க இன்ஸ்பெக்டர்? நைட் நேரத்துல இப்டி வந்து பொம்பளைப் புள்ளைய விசாரிச்சா என்ன அர்த்தம்? என்ன விஷயம்?" என்றார் கடுமையான குரலில்.

காவலர் சற்றே பின்வாங்கினார். இருப்பினும் சமாளித்து, "விஷயம் கொஞ்சம் சீரியஸ் சார். நாங்க ஃபோன் பண்ணோம் உங்களுக்கு, ரெஸ்பான்ஸ் இல்ல. வேம்பத்தூர்ல இருந்து மதுரைக்கு குடிபோன விவசாயி ஒருத்தர் இன்னிக்கு சாயந்திரம் செத்துட்டாரு. மரணத்துல சந்தேகம் இருக்கறதா சொல்லி மதுரை ஜிஹெச் முன்னாடி ஆர்ப்பாட்டம் பண்றாங்க சொந்தக்காரங்க. இதேமாதிரி இவங்க பேமிலியும் இறந்துபோயிருக்காங்க, அதுனால... கொஞ்சம் விசாரிக்கணும்..." என இழுத்தார்.

வானதி கண்களில் நீர் திரண்டது. சிலதினங்களாக அமிழ்ந்திருந்த சோகமும் குழப்பமும் மீண்டும் மனதில் மேலெழும்ப, லேசான விசும்பல் வெளிப்பட்டது அவளிடம். திவாகர் அவளோடு அணைப்பாக நின்று, கைகளை அவள் கையோடு கோர்த்துப் பிடித்துக்கொண்டு, 'நான் இருக்கிறேன்' என ஆறுதலாக நின்றான்.

வானதியைக் கண்டுகொண்ட ஆய்வாளர், ஒரு பெண் காவலரை அழைத்து, "மேடம்மை வண்டிக்குக் கூட்டிட்டுப் போங்க" என்றிட, அவளருகில் நெருங்கிய காவலரைக் கைகாட்டித் தடுத்த திவாகர், "நானே கூட்டிட்டு வர்றேன்." என்று அடர்ந்த குரலில் கூற, அந்தப் பெண்ணும் அவனையும் ஆய்வாளரையும் ஒருமுறை பார்த்துவிட்டு முன்னால் நகர்ந்தார்.

நீயன்றி வேறில்லை.Where stories live. Discover now