அத்தியாயம் - 34

278 13 2
                                    

விஷ்ருத்தின் வீட்டில்....

          "இது என்ன பதில்ம்மா", என்று கண்கள் விரிய அவரை பார்த்தான். அவர் முகத்தில் சிந்தனை ரேகைகள் தெரிந்தது.

      விஷ்ருத் தேவகியின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான். அவனை நிமிர்ந்து பார்த்து "உனக்கு சாதகமான பதில்" என்று எழுந்தார். அவர் கையை பிடித்து தடுத்து, மீண்டும் அமர வைத்தான்.

     "ஏம்மா... இப்டி பேசுறீங்க... அங்க நம்ம போக வேண்டாமா... உங்களுக்கு பிடிக்கலையா... சரியான பதில் சொல்லுங்க... உங்க மனசுல என்ன இருக்கோ அதை சொல்லுங்க", சோகம் நிறைந்த குரலில் கேட்டான்.

     "விச்சு கண்ணா... கம்பனிய பொறுத்தவரைக்கும் உங்கப்பா ஒருத்தர் மேல நம்பிக்கை வைச்சு... ஒரு பொறுப்பை கொடுக்கிறாருனா அது பின்னாடி பல காரணம் இருக்கலாம்... ஆனா இப்போ உன்கிட்ட இந்த கம்பனியோட மொத்த பொறுப்பையும் தராருனா... அதுக்கு ஒரே காரணம் நீ அவரோட இருக்கனும்னு ஆசைப்படறாரு அது மட்டும் தான்...", என்றவர் சிறு புன்னகையோடு "உனக்கு இதுல சம்மதம்னா... எனக்கும் சம்மதம்... ஆனா உங்கப்பாவோட ஒரே வீட்ல என்னால தங்கமுடியாது... வேற வீட்டை பாரு", என்று தான் கூறி வேண்டியது அவ்வளவுதான் என்பது போல் அமர்ந்து இருந்தார்.

     "எனக்கு அது புரியுது... நான் கேட்ட கேள்விக்கு நீங்க பதில் சொல்லலயே... சம்மதம்னா என்ன அர்த்தம்... உங்களுக்கு அங்கு வர இஷ்டமா இல்லையா", என்று மீண்டும் அதே கேள்வியை எழுப்பினான்.

    "ப்ச்... விடா கண்டா... போலாம்டா... எனக்கு சந்தோஷம் தான்... ஆனா ஒரு தயக்கம்" என்றவர் முழுதாக கூறும் முன்பே அவரது அலைப்பேசி ஒலித்தது.

    எடுத்து பார்த்தார். புதிய எண்ணாக இருந்தது. யோசனையாக எடுத்து காதில் வைத்தார். விஷ்ருத் ஆர்வமாக அவரை பார்த்துக் கொண்டிருந்தான்.

      "ஹலோ..." என்ற தேவகியின் குரலிற்கு, அந்த பக்கம் இருந்து எவ்வித பதிலும் வரவில்லை.

    அவரின் குரல் ஒலியை... இத்தனை ஆண்டுகள் கடந்து கேட்கும் வாசுதேவனிற்கு பேச்சே வரவில்லை. காதலாக கேட்ட குரல்... திட்டும்போது கேட்ட குரல்... ஆச்சரியத்தில் கேட்ட குரல்... கோபத்தில் கேட்ட குரல்... கடைசியாக பிரிவில் கேட்ட குரல்... மீண்டும் இன்று தானே கேட்கிறார். குரலில் இளமை பறந்து... முதுமை குடியிருந்தது. அதுவும் சாந்தமாக ஒலித்த அவரின் குரலில் ஏதோ ஒரு இனம்புரியாத உணர்வினை உணர்ந்தார் வாசுதேவன். நொடிக்குள் நிகழ்ந்த இந்த மாற்றத்தை அப்படியே ஒதுக்கியவர்... அதிகாரமான குரலில் "நான் வாசுதேவன்" என்றார்.

[✔]💞என் நெஞ்சின் தா(க்)கம் நீ💞Where stories live. Discover now